
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். இன்று காலை சிறப்பு விமானம் பிரான்ஸ் புறப்பட்ட அவர் மாலை 4 மணியளவில் பாரிஸ் சென்றடைவார். பிரதமரின் சிறப்பு விமானம் ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்கும். இங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.இரவு 7:30 மணியளவில் பிரதமர் செனட் சபையை அடையும் மோடி, செனட் தலைவர் ஜெராட் லார்ச்சரை சந்திக்க உள்ளார்.
இரவு 8.45 மணியளவில் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னை மோடி சந்தித்துப் பேசுகிறார். லா செயின் மியூசிக்கல் ஹாலில் இரவு 11 மணியளவில் நடைபெற உள்ள இந்திய சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், மதியம் 12:30 மணிக்கு எலிசே அரண்மனையை சென்றடைவார். இங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். வெள்ளிக்கிழமை பாரிஸில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் செல்வதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த அறிக்கையில் “ எனது நண்பர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் நான் பிரான்சுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறேன். பாரிஸில் நடைபெறும் பிரெஞ்சு தேசிய தினம் அல்லது பாஸ்டில் தின கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறேன். பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்தியாவின் மூன்று சேவைகளும் பங்கேற்கின்றன. இந்திய விமானப்படை விமானங்கள் கடந்தும் பறந்து செல்லும். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டுறவை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த ஆண்டு நமது மூலோபாய கூட்டுறவின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. ஜனாதிபதி மக்ரோனை சந்தித்து அடுத்த 25 ஆண்டுகளில் இந்த கூட்டுறவை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசிக்க ஆவலுடன் உள்ளேன். 2022-ல் பிரான்ஸு-க்கு எனது கடைசி அதிகாரப்பூர்வ பயணம் செய்த பிறகு, ஜனாதிபதி மக்ரோனை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மே 2023 இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் பிரான்ஸ் அதிபரை சந்தித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.