
குஜராத் கலவரத்துக்கு சதி செய்ததாக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடியை விடுவித்ததை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன. முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது.
இது பற்றி விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நரேந்திர மோடிக்கு இந்த கலவரத்தில் சம்பந்தம் இல்லை என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மறைந்த முன்னாள் எம்.பி. இஷானின் மனைவி ஜாகியா ஜாப்ரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நரேந்திர மோடி மற்றும் 59 பேருக்கு இந்த கலவரத்தின் சதியில் தொடர்புள்ளது என்றும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.
3 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை 3-–ம் தேதி நிறைவடைந்தது. நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட அவரது மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தது. இருப்பினும் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.