சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் 5 ஆண்டுகளுக்கு தேர்வு

First Published Oct 5, 2017, 9:01 PM IST
Highlights
Akhilesh Yadav is the leader of the Samajwadi Party for 5 years


சமாஜ்வாதிக் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று தேர்வு செய்யப்பட்டார். 

 

இதன் மூலம் முலாயம் சிங், அவரின் தம்பி சிவபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு, அகிலேஷ் கட்சியை வலுவாகக் கைப்பற்றியுள்ளார்.

 

உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவுக்கும், அவரின் சித்தப்பா சிவபால்யாதவுக்கும் இடையே கடந்த சட்டசபை தேர்தலின் போது மோதல் ஏற்பட்டது. இதனால், கட்சிக்குள் பெரிய அளவிலான குழப்பம் ஏற்பட்டு, முலாயம் சிங் தலைமையில் ஒரு அணியும்,அகிலேஷ் தலைமையில் ஒரு அணியும் இயங்கியது. 

 

தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் சின்னத்துக்காக முறையிட்டனர். இதில், அதிகமான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் இருந்ததால், சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கப்பட்டது. 

 

இருதரப்பாக சட்டசபைத் தேர்தலை சமாஜ்வாதி கட்சி சந்தித்து படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து முலாயம் சிங் யாதவ், அவரின் சகோதரர் சிவபால் சிங் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

புதிய கட்சியை முலாயம் சிங் தொடங்குவார் என எதிர் பார்க்கப் பட்ட  நிலையில், அவர் “கட்சி ஏதும் தொடங்கப் போவதில்லை, தனது ஆசிகள் அகிலேஷ் யாதவ் எப்போதும் இருக்கும்’’ என்று அறிவித்தார். 

 

இதற்கிடையே சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதிலக்னோவில் நடந்தது. அந்த கூட்டத்தில் கூட  முலாயம்சிங், சிவபால் சிங் கலந்து கொள்ளவில்லை.

 

இந்நிலையில், ஆக்ராவில் நேற்று நடந்த தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள முலாயம் சிங்கை நேரில் சென்று அகிலேஷ் யாதவ் அழைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அகிலேஷின் சித்தப்பா சிவபால் சிங்கும் பங்கேற்கவில்லை.

 

இந்நிலையில், ஆக்ராவில் நேற்று நடந்த தேசிய மாநாட்டில் கட்சியின் தேசியத் தலைவராகஅகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார் என்று மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் முறைப்படி அறிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியில் தலைவராக ஒருவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். இந்நிலையில், கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 5 ஆண்டுகள் வரை தலைவராக தொடர முடியும் என்று நேற்று மாற்றப்பட்டது. 

 

இதன்படி, 44 வயதாகும் அகிலேஷ் யாதவ் தலைமையில் 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும், 2022ம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலையும் சமாஜ்வாதி கட்சி சந்திக்கும். அதேபோல மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் பதவிக்காலமும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 

 

முலாயம் சிங் ஆசி கிடைத்தது

 

மாநாட்டில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது-

சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நான் ‘நேதாஜி’யை (முலாயம்சிங்) நேரில் அழைத்து இருந்தேன். அவரின் வருகையை ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறி இருந்தேன். இது தொடர்பாக நான் நேற்று அவருடன்தொலைபேசியில் பேசி, அழைப்பு விடுத்தேன். மிகப்பெரிய அளவில் மாநாடு நடக்கிறது, கட்சியின் சட்டத்திருத்தத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, உங்களின் ஆசி இல்லாமல் கட்சியில் முன்னேற்றம் இல்லை என்று கூறினேன். நம் அனைவருக்கும் ஆசிகள் உண்டு என்று முலாயம் சிங் கூறினார். 

 

சித்தப்பா சிவபால் சிங்கும் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் ெதரிவித்தார். என் வயதுக்கும், உறவுகளுக்கும் ஏற்ற பலனை பெற்றுவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!