
‘பத்மாவதி’ படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே, எதிர்ப்பு தெரிவிப்பதா? என, அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டம்
பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி' திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்து ராணி பத்மாவதி குறித்த உண்மைகள் திரிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அந்தப் படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி, வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
ராஜபுத்திர சமூகத்தினரும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்தியாவில் டிசம்பர் 1-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில்..
பத்மாவதி திரைப்படத்துக்கு இங்கிலாந்தில் திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. திரைப்படத்தில் எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்தை வெளிநாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டுமென்று வழக்குரைஞர் எம்.எல்.சர்மா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவசர வழக்காக
அதில், ‘‘பத்மாவதி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அத்திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பு தவறான தகவலை அளித்துள்ளது.
எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்திரைப்படத்தை வெளிநாட்டில் வெளியிட அனுமதித்தாலும் இந்தியாவில் சமுக அமைதி குலையும். எனவே, வெளிநாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.
மனு தள்ளுபடி
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை விசாரித்து நேற்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் வெளிநாடுகளில், பத்மாவதி படத்தை திரையிட தடை விக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடும் கண்டனம்
மேலும் தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பே, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போன்ற அரசு உயர் பதவி வகிப்போர் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடுகிறவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது-
தாக்கம்
‘‘இதுபோன்ற முன்கூட்டியே தீர்மானிக்கும் கருத்துகள் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாக அமைந்துள்ளது. இது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை அவமதிக்கும் செயலாகும்.
மேலும் தணிக்கை வாரிய உறுப்பினர்களிடம் இந்த கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் எனவே பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை இனி தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
5 முதல்-அமைச்சர்கள்
பா.ஜனதா ஆளும் 5 மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம்இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.