
உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழும் இந்தியர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், ஐதராபாத்தில் நடந்த சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, இந்திய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறார். அவரது வாழ்க்கைப்பயணமும் அதில் அவர் அடைந்துள்ள வளர்ச்சியும் அபரிமிதமானது. டீ விற்ற மோடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார். அவரது இந்த வளர்ச்சி மிகவும் சிறப்பானது.
தோல்வியைக் கண்டு துவண்டுபோகாமல், சாதித்துக்காட்டி உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழும் இந்தியர்களுக்கு எனது பாராட்டுகள். இந்தியா மற்றும் அமெரிக்க மக்களிடையே நெருக்கம் அதிகரித்துவருவதையும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் நல்லுறவு வலுவடைந்து வருவதையே இந்த மாநாடு காட்டுகிறது என இந்தியர்களையும் பிரதமர் மோடியையும் இவாங்கா புகழ்ந்து பேசினார்.
மேலும் பெண் தொழில்முனைவோருக்கு பாராட்டுகளையும் இவாங்கா தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் அவருடன் வந்த தொழில்நுட்ப குழுவினர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
எரிசக்தி, அடிப்படை கட்டமைப்பு, ஆரோக்கிய பராமரிப்பு, நிதி தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் அதிகமான தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.