
கர்நாடகத்தில் உள்ள ‘முதோல் ஹவுண்ட்’ என்ற நாட்டு இன நாய் முதல்முறையாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை ராணுவத்தில் ‘லேப்ரடார்’, ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’ ஆகிய வெளிநாட்டு நாய் இனங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக உள்நாட்டு நாய் இனம் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
6 நாய்கள்
இது குறித்து தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்ட செய்தியில், “ உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் உள்ள ராணுவத்தின் கால்நடை பயிற்சிஅகாடெமியில் 6 முதோல் ஹவுண்ட் நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாய்கள் தங்களின் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பதால், வரும் டிசம்பர் மாதம், ஜம்மு-காஷ்மீர் எல்லை பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்படலாம் எனத் தெரிகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பிறப்பிடம்
‘முதோல் ஹவுண்ட்’ நாயின் பிறப்பிடம் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள பாகல்கோட் மாவட்டமாகும். ‘முதோல் ஹவுண்ட்’ நாய் குறித்து கால்நடை ஆய்வு மற்றும் தகவல் மையத்தின் தலைவர் மகேஷ் தோதாமணி கூறியதாவது-
பாகல்கோட் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நாயை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு, இதை பிழைப்பாக வைத்துள்ளனர். இந்த வகை நாய் மிக விரைவாக ஓடும் திறனையும், மோப்பம் பிடிக்கும் திறனையும் கொண்டவை.
ராணுவத்துக்கு உதவும்
ஆதலால், தீவிரவாதிகளைக் கண்டறியவும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கவும் ராணுவத்துக்கு இந்த வகை நாய்கள் மிகவும் உதவும்.அதேசமயம், வெளிநாட்டு நாய் இனமான லேப்ரடார், அல்ஷேசன், ஜெர்மன் ஷெப்பேர்ட் ஆகிய நாய்களுக்கு கொஞ்சமும் சளைத்தவை இல்லை.
நீண்ட கால்களையும், ஒல்லியான தோற்றத்தையும் கொண்ட ‘முதோல் ஹவுண்ட்’ நாய் வேட்டைக்கு மிகவும் உகந்தது’’ என்று தெரிவித்தார்.
சிவாஜியின் படை
மேலும், ‘முதோல் ஹவுண்ட்’ நாய்கள் வரலாற்றோடு மிகவும் தொடர்புடையவை என்று அர்ஜூன் சிங் ஜடேஜா கூறுகிறார். அவர் கூறுகையில், “ கடந்த காலங்களில் இந்தியர்கள் வர்த்தகத்துக்கு செல்லும்போது, தங்களுக்கு பாதுகாப்பாக ‘முதோல் ஹவுண்ட்’ நாய்களை பழக்கியிருந்தனர். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தனது படையில் ‘முதோல் ஹவுண்ட்’ நாய்களுக்கு என தனிப்பிரிவு வைத்து இருந்துள்ளார். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் இந்த வகை நாய் ஒழிக்கப்பட்டு, வெளிநாட்டு நாய்கள் சேர்க்கப்பட்டன’’ எனத் தெரிவித்தார்.