
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனாதிபதி மாளிகையை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதா சார்பில் ஒருவர் அலங்கரிக்கும் காலம் நெருங்கிவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் 62 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், கடந்த 2012ம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தேர்வான காங்கிஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 69 சதவீத வாக்குகளைப் பெற்று இருந்தார். அவரோடு ஒப்பிடும்போது, இது குறைவுதான்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதி யோடு முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 17ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 20ந்தேதியும் நடக்கிறது.
பா.ஜனதா கூட்டணி சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த, உத்தரப்பிரதேசத்தின் ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகரும், தலித் சமூகத்தைச் சேர்ந்த மீரா குமார் போட்டியிடுகிறார்.
இந்த ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை ‘தலித்துகளுக்குள்’ நடக்கும் போட்டி என்ற கூறலாம். ஏறக்குறைய 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 வாக்குகளில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் கோவிந்த் மூன்றில் 2 பங்கு வாக்குகளை அதாவது ஏறக்குறைய 7 லட்சம் வாக்குகளைப் பெறுவார் எனத் தெரிகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், அதிமுக, டி.ஆர்.எஸ்., ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. இதனால், கோவிந்துகுக்கு ஏறக்குறை 6.82 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என கணக்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் ஏறக்குறைய 4 லட்சம் வாக்குகளுக்குள் பெறக்கூடும். காங்கிரஸ் தவிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால், 3.76 லட்சம் வாக்குகள் மீரா குமாருக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே எந்த பக்கமும் சாராமல் இருக்கும் ஆம் ஆத்மி, ஐ.என்.எல்.டி., ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரியவில்லை. இவர்களின் வாக்குகள் 39,965 மதிப்புடையவையாகும்.
ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் 337 பேர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் கோவிந்துக்கு 524 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக எம்.பி.கள் மூலம 3 லட்சத்து 70 ஆயிரத்து 992 வாக்குகளும், மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 685 வாக்குகளும் கோவிந்துக்கு கிடைக்கும்.
எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு 235 எம்.பி.க்கள் ஆதரவே இருக்கிறது. இதில் எம்.பி.க்கள் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 380 வாக்குகளும், காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் மூலம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 881 வாக்குகளும் மீரா குமாருக்கு கிடைக்கும்.
இதில் ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு என்பது, மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்சமாக உ.பி.யில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 83 ஆயிரத்து 824 ஆகும். ஒருஎம்.எல்.ஏ.வின் வாக்குமதிப்பு 208 ஆகும். குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்குமதிப்பு 7. அங்கு மொத்தம் 224 வாக்குகள் உள்ளன.
பா.ஜனதா வேட்பாளர் கோவிந்த் வேட்புமனுவைத் தாக்கல் செய்து, மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவை கோரத் தொடங்கிவிட்டார்.
ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் இன்னும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை. வரும் 28-ந்தேதி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா கூட்டணியைப் பொருத்தவரை மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், திரிபுரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி, டெல்லியைத் தவிர பெரும்பாலான மாநில அரசுகளின் ஆதரவைப் பெற்றுவிட்டு, அசுரபலத்துடன் வேட்பாளரை களத்தில் இறக்கி இருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் பதிவாக உள்ள 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 வாக்குகளில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற 50 சதவீதம் வாக்குகளுக்கு அதிகமாக பெற வேண்டும். அதாவது, 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 வாக்குகள் பெற வேண்டும்.
இப்போதுள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் கோவிந்தின் கையே ஓங்கி இருக்கறது, இன்னும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு மேல் இருப்பதால், அதிகமான கட்சிகள், மாநிலங்கள் ஆதரவு அளிக்கலாம். அதற்கான முயற்சியில் பா.ஜனதாவும், வேட்பாளர் கோவிந்தும் மும்முரமாக இறங்கிவிட்டன.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் இந்த வேட்பாளருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சியின் கொறடா உத்தரவிடமுடியாது. அவர்களின் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பதால், இதில் மனசாட்சியே அரசன். நிர்பந்தளுக்கு உட்பட்டு வாக்களிப்பார்களா அல்லது நாட்டின் நலன் கருதி வாக்களிப்பார்களா என்பது ஒவ்வொருவரைப் பொருத்தது.
கோவிந்த் வெற்றி பெற்றால், ஜனாதிபதி மாளிகைக்குள் முதல் முறையாக அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். -பாஜனதா பின்புலம் கொண்ட முதல் நபர் எனும் பெருமையைப் பெறுவார்.