
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் கடந்த 2013ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக இருந்தபோது, தன்னை பேசவிடாமல் எப்படி நடத்தினார் என்பது குறித்து வீடியோவை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வௌியிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த, ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் உள்ளிடட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் மாநிலத்தில் பிறந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவை சபாயநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
டுவிட்டரில் வீடியோ
இந்நிலையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மீராகுமார் மக்களவைசபாநாயகராக இருந்தபோது, எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு எதிராக எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா டுவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று வௌியிட்டார்.
60 முறை
அதில் அவர் கூறுகையில், “ நான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, சபாநாயகராக இருந்த மீரா குமார் என்னை எப்படி நடத்தினார் தெரியுமா?. 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தொடரில் நான் 6 நிமிடங்கள் பேசியபோது, அதில் 60 முறை தலையிட்டு மீராகுமார் இடைமறித்தார். ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரச்சினை செய்யும் போது, என்னை அவர்களிடம் இருந்து மீராகுமார் பாதுகாக்கவில்லை.
ஊழல் ஆட்சி
இதுதான் மீராகுமாரின் நடுநிலைத்தன்மையா?. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், இருந்த மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஆட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான்’’ என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ
ஏறக்குறைய 6 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், சுஷ்மா சுவராஜ் எழுந்து பேச முற்போது, நன்றி, சரி என்று கூறும் மீரா குமார் அவரை அமைதிப்படுத்தி அமரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் உள்ளன.