உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

By Manikanda Prabu  |  First Published Mar 13, 2024, 5:15 PM IST

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்


மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து நாட்டில் உள்ள அனைவருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்து அதனை இந்திய சட்ட ஆணையம் மதிப்பாய்வு செய்து வருகிறது.

இதனிடையே, மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம், பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களிம்ன் முழக்கங்களுடன் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

Tap to resize

Latest Videos

இதன் மீதான விவாதம் நடந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை சட்டமாக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில்,  உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், நாட்டிலேயே பொது சிவில் சட்டம் அமலாக உள்ள முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆகவுள்ளது.

புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு மார்ச் 15இல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, வெற்றி பெற்றதும் பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது.

அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர். அதனடிப்படையில், உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, தற்போது ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல எனவும், இது சமத்துவம், மற்றும் சம உரிமைகள் கொண்டது எனவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!