
நட்பு என்றால் என்ன என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து சுமார் 12,800 கிலோமீட்டர் பயணம் செய்து தனது நண்பனை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞரின் வீடியோ பலரின் இதயங்களை வென்றுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பிரேஷித் குஜார், புனேயில் இருக்கும் தனது உயிர் நண்பன் சர்வேஷ் வைபவ் திக்கேவைச் சந்திக்கத் திட்டமிட்டார். சுமார் 8,000 மைல்கள் கடந்து வந்தாலும், சாதாரணமாகச் சந்திக்க விரும்பாமல் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை அசத்த நினைத்தார்.
வைரல் வீடியோவில், சர்வேஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு அந்நியர் போல பிரேஷித் அவர் அருகில் வந்து அமர்கிறார்.
ஆரம்பத்தில் ஏதோ தெரியாத நபர் என்று நினைத்து சர்வேஷ் அவரைத் தள்ளிப் போகச் சொல்கிறார். ஆனால், பிரேஷித் தனது முகத் திரையை விலக்கியவுடன், ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துபோன சர்வேஷ், அடுத்த நொடியே தனது நண்பனை ஆரத் தழுவிக்கொண்டார்.
இந்த வீடியோ பகிரப்பட்ட சில நாட்களிலேயே 4.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் தங்களது கருத்துக்களை வேடிக்கையாகவும் நெகிழ்ச்சியாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
"இதைப் பார்ப்பவர்கள் அனைவரும் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"என்னுடைய நண்பர்கள் மும்பையிலிருந்து புனேவுக்கே வர மாட்டார்கள், இவர் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார்" என மற்றொருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
"2x வேகத்தில் வீடியோவைப் பார்த்த எனக்கு, அவர் திடீரென குதித்ததைப் பார்த்து மாரடைப்பே வந்துவிட்டது" என ஒருவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.