
கொல்கத்தாவில் நடந்த 'ஆர்எஸ்எஸ் 100 வ்யாக்யான் மாலா' நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் ஒரு வெளிப்படையான அமைப்பு என்றும், ஆர்எஸ்எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நினைப்பவர்கள் நேரில் வந்து அதன் பணிகளை ஆய்வு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மோகன் பகவத், "நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொன்னது போல், ஆர்எஸ்எஸ்ஸின் பணி வெளிப்படையானது. எப்போது வேண்டுமானாலும் வந்து நீங்களே பார்க்கலாம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய மோகன் பகவத், ''ஆர்எஸ்எஸ்காரர்கள் தீவிர தேசியவாதிகள். இந்துக்களை ஒழுங்கமைக்கிறார்கள். இந்துக்களின் பாதுகாப்பிற்காக வாதாடுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இதை பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதை தெரிந்துகொள்ள விரும்புவோர் ஆர்எஸ்எஸ்-ஐ நேரில் வந்து பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.
மக்கள்தொகை ஒரு சுமை
மேலும் மக்கள் தொகை குறித்து பேசிய மோகன் பகவத், "நாம் மக்கள்தொகையை திறம்பட நிர்வகிக்கவில்லை. மக்கள்தொகை ஒரு சுமை, ஆனால் அது ஒரு சொத்தும் கூட. மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் நமக்கு ஜனநாயக ஈவுத்தொகை உள்ளது. நமது நாட்டின் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, வசதிகள், பெண்களின் நிலை, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு 50 ஆண்டு கால திட்டத்தின் அடிப்படையில் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்'' என்றார்
லிவ்-இன் உறவுகள் மிகவும் தவறு
இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் லிவ்-இன் உறவுகள் குறித்து பேசிய அவர், ''லிவ்-இன் உறவுகள் என்னை பொறுத்தவரை சரியல்ல. குடும்பம், திருமணம் என்பது வெறும் உடல் திருப்திக்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல. அது சமூகத்தின் ஒரு அங்கம். ஒரு தனிநபர் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை குடும்பத்தில்தான் கற்றுக்கொள்கிறார். எனவே, இது நமது நாடு, சமூகம் மற்றும் மத மரபுகளைப் பாதுகாப்பது பற்றியது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றால், பரவாயில்லை. நாம் சந்நியாசிகளாக மாறலாம். ஆனால் அதையும் செய்யாமல், பொறுப்பையும் ஏற்காவிட்டால், எப்படி எல்லாம் நடக்கும்?" என்று அவர் தெரிவித்தார்.