
க்ருஹ ஜோதி திட்டத்திற்கும் மின் கட்டண உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இன்று கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FKCCI) தலைவர் பி.வி.கோபால் ரெட்டி தலைமையிலான தொழிலதிபர்கள் குழுவுடன் முதலமைச்சர் சித்தராமையா பேசினார். அப்போது "எங்கள் அரசு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (கேஇஆர்சி) எங்கள் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருந்தது" என்று கூறினார்.
பிரதிநிதிகள் குழுவின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிதித்துறை, எரிசக்தி துறை மற்றும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தனி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் தூதுக்குழுவிடம் உறுதியளித்தார்.
கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனது கட்டண வரிசையில் தொழில்துறைக்கான மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மின்சார வரியை 9 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என தூதுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மற்ற மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள MSME கொள்கை மற்றும் சட்டத்தை உருவாக்கவும், எரிபொருள் அதிகரிப்பு கட்டணங்களில் தள்ளுபடி வழங்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக் சட்டப்பேரவை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான க்ருஹ ஜோதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இந்த திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால் கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில், கர்நாடகாவில் மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டது. ஒருபக்கம் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, மறுபுறம் மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.