நாட்டை அழிவை நோக்கி இட்டு செல்கிறாரா மோடி..!! பகீர் கிளப்பும் சுற்று சூழலியல் அமைப்புகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2019, 11:56 AM IST
Highlights

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கும் வரி இழப்புகளை ஈடு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.  இப்படி செய்வதன் மூலம் மாற்று எரிசக்திக்கு தேவையான நிதி இல்லாத நிலை உருவாகியுள்ளது. 

தங்களை அறிவாளிகளாக கருத்திக்கொள்ளும் சிலர், மோடி தலைமையிலான ஆட்சி வந்தபிறகுதான் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக பல திட்டங்கள் தீட்டப்படுவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளார்கள். அவர்கள் மறந்த சில விஷயங்களை நாம் நினைவுபடுத்துவோம். காலநிலை மாற்றமும் ஜி.எஸ்.டி வரியும்:-இன்றைய சூழலில் இந்த உலகை மிக அதிகமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயம்,  காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும்தான். பாரிஸ் மாநாட்டில் கூட இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் நாம் வெளியிடும் கார்பன் அளவை குறைக்கும் முயற்சிகளை எடுக்க ஒப்புக்கொண்டிருக்கின்றன. நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதன் மூலம் கார்பன் அதிகமாக வெளியேறும்.  

இதை கருத்தில் கொண்டு கடந்த UPA அரசு, "மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியம்" (national clean energy fund) என்கிற ஒன்றை உருவாக்கி அதற்கான நிதி ஆதாரத்தையும் அறிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களிருந்து நிலக்கரி எடுக்கப்பட்டாலோ அல்லது நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டாலோ டன் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வரி என்று நிர்ணயிக்கப்பட்டது.  இந்த நிதியை வைத்து புதிப்பிக்க கூடிய ஆற்றல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க உதவி செய்யலாம் (அந்த காலகட்டத்தில் சூரிய சக்தி மிகவும் விலை உயர்ந்து இருந்தது) அதனால் நிலக்கரி பயன்பாடு மூலம் ஏற்படும் சூழல் மாசை குறைக்கவும் செய்யலாம்.  

2014ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் 50 ரூபாயாக இருந்த வரியை 100 ருபாயாக உயர்த்தியது.  2015ல் இது 200 ரூபாய் ஆனது.  2016ல் 400 ரூபாயாக உயர்த்தப்பட்ட போது சூழல் செயற்பாட்டாளர்கள் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.  8 மடங்காக உயர்ந்தது இந்த நிதி. கடந்த நிதியாண்டின் துவக்கத்தில் இந்த நிதி மட்டும் 57,790 கோடி ரூபாய் இருந்தது. மத்திய அரசு சூழல் அமைச்சகத்துக்கு ஒரு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யும் நிதியை விட 20 மடங்கு அதிகம். ஆனால் கடந்த 2010லிருந்து 2017 வரை அந்த நிதியிலிருந்து வெறும் 37 சதவிகிதம் மட்டும் புதுப்பிக்கப்பட கூடிய ஆற்றல் மற்றும் சூழல் செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. மீதி தொகை செலவு செய்யப்படாமல் இருந்தது. 

ஜி.எஸ்.டி அறிமுகத்துக்கு பின்னர் இந்த நிதி ஜி.எஸ்.டியின் கீழ் வந்திருக்கிறது.  இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கும் வரி இழப்புகளை ஈடு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.  இப்படி செய்வதன் மூலம் மாற்று எரிசக்திக்கு தேவையான நிதி இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த வருடம் செலவு செய்யப்படாவிட்டால் கூட அடுத்த வருடத்துக்கு அதை கொண்டு போகலாம். ஆனால் இது எதுவுமேஇப்போது சாத்தியம் இல்லை.  

புதுப்பிக்கப்பட கூடிய ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிப்பது மட்டும் உலகை அழிவு பாதையிலிருந்து மீட்டெடுக்கும் என்பது நம் கண்ணுக்கு முன்னால் நிற்கும் பெரிய உண்மை. பா.ஜ.க அரசோ சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இறுதியாக  (காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளாமல் பாஜக அரசு செய்துவரும் தவறுகள் தொடர்ச்சியாக வெளிவரும்.) எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட தக்கது. 

click me!