கவரிங் நகைகளை வைத்து மோசடி.. 400 சவரன் தங்க நகைகளை அசால்ட்டா தூக்கி ஆப்பில் சிக்கிய வங்கி காசாளர்..

Published : Dec 24, 2021, 06:04 PM ISTUpdated : Dec 24, 2021, 06:06 PM IST
கவரிங் நகைகளை வைத்து மோசடி.. 400 சவரன் தங்க நகைகளை அசால்ட்டா தூக்கி ஆப்பில் சிக்கிய வங்கி காசாளர்..

சுருக்கம்

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு மாற்றாக கவரிங் நகைகளை மாற்றி மோசடி செய்த காசாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்ட 400 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.  

புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1,500-க்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 18-ம் தேதி ஆறுமுகம் என்பவர் தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்றுள்ளார். அப்போது லாக்கரில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது கடன் அட்டைக்கான நகை பையில் அவரது நகைக்கு பதிலாக கவரிங் நகை இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூட்டுறவு வங்கி தலைமை மேலாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை வங்கியில் அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் நகை மோசடியில் அதிகாரிகள் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வங்கியின் தலைமை காசாளரான கணேசன், உதவி காசாளாரான விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

பொதுவாக வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை லாக்கரில் வைத்து பாதுகாப்பது வழக்கம். இந்த கூட்டுறவு வங்கிகளில் லாக்கரை திறக்க காசாளர்கள் செல்லும்போது வங்கி மேலாளர் உடன் செல்வது வழக்கம். அவர் விடுமுறை எடுத்தால் உதவி மேலாளர் பிரதீபாவிடம் வங்கி லாக்கர் சாவிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உதவி மேலாளர் பணியில் இருக்கும்போது லாக்கர் திறக்கும் போது காசாளரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் லாக்கர் சாவிகளை கொடுத்து அனுப்புவது தெரியவந்துள்ளது.

அதை பயன்படுத்திக்கொண்ட கணேசன், விஜயகுமார் இருவரும் வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து , தங்க நகைகளை வெளியில் வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வங்கியில் அடமானம் வைத்தோர் தங்க நகைகளை மீட்க வரும்போது குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறி வெளியில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து லாக்கரில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் லாக்கரில் இருந்த அடமான நகைகளில் 80 பைகளில் இருந்த 400 பவுன் நகைகளை வெளியில் அடமானம் வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நகைகள் அனைத்தும் மீட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், மீட்கப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு முறைப்படி மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும் என்றும்  பொதுமக்கள் நகைகள் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நகை மோசடி வழக்கு தொடர்பாக கைதான இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!