
புதுடெல்லி, நவ. 18-
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரகம் தானம் செய்ய போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்ததை உறுதி செய்தனர். மேலும்,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று எய்ம்ஸ் டாக்டர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
சுஷ்மாவின் ரத்த குரூப் ‘பி பாசிட்டிவ்’ வகை ஆகும். அவரது குடும்பத்தினர் ரத்த குரூப் பரிசோதித்து பார்த்ததில் யாருடைய ரத்தமும் சுஷ்மாவுக்கு பொருந்தவில்லை. எனவே வெளி நபரிடம் இருந்துதான் தானம் பெற வேண்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளிப்படையாக தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு டயாலிசிஸ் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பரிசோதனைகள் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேசத்தின் 26 வயதாகும் போக்குவரத்து கான்ஸ்டபிள் கவுரவ் சிங் தான்கி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எனது கிட்னியை (சிறுநீரகம்) தானமாக கொடுக்க விரும்புகிறேன். அவரது உடல்நலம் குறித்து கேள்விபட்டதும் நான் மிகுந்த கவலையடைந்தேன்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு என்னுடைய கிட்னி அவருக்கு சரியாக பொருந்தினால் நான் அவருக்கு கிட்னியை தானமாக வழங்குவேன். நம்முடைய வெளியுறவுத்துறை மந்திரி. அத்துடன் சிறந்த தலைவர் இதுகுறித்து அவருக்கு டுவிட்டரும் செய்துள்ளேன்’’ என்றார்.