
கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழ்நாட்டிலிருந்து கன்னியாகுமரி வழியாகச் செல்லும் வாகனங்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த 23-ம் தேதி ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டாவது வாரமாக இன்று கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான மருந்து, காய்கறிக் கடைகள் மற்றும் பால் விற்பனை மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம், விமான நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மருத்துவ மனைகளுக்கு செல்ல மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வசதியாக ஓரிரு கேரளா அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முழு முடக்கத்தையொட்டி கேரளா - தமிழ்நாடு எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தபட்டு, மருத்துவமனை, பால் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்கள் செல்லும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற வாகனங்கள் களியக்காவிளையிலே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லையென்ற போதிலும் கேரள ஊரடங்கு காரணமாக இன்று தமிழக கேரள எல்லை களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் இன்று முழு ஊரடங்கினால் இடுக்கி மாவட்டம் தேக்கடி படகுத்துறை தளத்தில் சுற்றுபயணிகளின் வருகை குறைவினால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் கேரளா செல்லும் குமளி மலைச்சாலை மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலை அடைக்கப்பட்டது.இதனால் தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறு கூலி வேலைக்கு செல்பவர்களும் பெரும் சிரமப்பட்டனர்.