
உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் வீட்டின் முன்பு துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் வசித்து வருகின்றார்.
அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அங்கு வந்த ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். தப்பியோடிய அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார்.