
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஆதார் அட்டையில் ஒரே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளதால், மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தனி அடையாள எண் என்றுகூறி ஆதார் வழங்கிவிட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஜனவரி 1-ந்தேதி பிறந்தநாளாக குறிப்பிடப்பட்டு இருப்பது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்துவார் நகரில் இருந்து 20கி.மீ தொலைவில் இருப்பது கெயிந்தி கட்டா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமீபத்தில் ஆதார் அட்டை புதிதாக வழங்கப்பட்டது. அந்த அட்டையில் அனைவரின் பிறந்த தேதியும் ஜனவரி 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த முகம்மது கான் கூறுகையில், “ என்னுடைய பிறந்த தேதியும், என் வீட்டருகே இருக்கும் அலாப்தினுக்கும் பிறந்த தேதி ஜனவரி 1-ந்தேதி என ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அலாப்தினின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஜனவரி1- பிறந்தநாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும்தான் இப்படி இருக்கிறது என்று ஆதார் மையத்தில் புகார் அளித்தால் கிராமத்தில் உள்ள 800 குடும்பங்களுக்கும் பிறந்த தேதி ஜனவரி 1 என்று இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட அடையாள எண் என்று ஆதாரை குறிப்பிட்டுவிட்டு, இப்படி, ஒரே மாதிரியான பிறந்ததேதி இருந்தால் என்ன பயன்?. நாங்கள் எங்கள் ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்துதான் ஆதார் மையத்தில் பதிவு செய்தோம். ஆனாலும் குழப்பம் நடந்துள்ளது’’ என்றார்.
கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் கய்யூம் கூறுகையில், “ ஆதார் அட்டையை வாங்கிப் பார்த்தவுடன் நான் அதிர்ந்துவிட்டேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரே பிறந்த தேதி இருக்கிறது. ஆனால், பிறந்த ஆண்டு சரியாக இருக்கும் என்று பார்த்தால், அதுவும் மாறி இருக்கிறது. எனது பாட்டியின் வயது 22 என குறிப்பிடப்பட்டுள்ளது. எனது பிள்ளைகளின் வயது 30 வயதுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த சம்பவம் குறித்து கிராமத்தின் துணைத் தலைவர் முகம்மது இம்ரான் கூறுகையில், “ மக்கள் தங்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அளித்து இருக்கிறார்கள். ஆதார் மையத்திடம் இது குறித்து புகார் அளித்துள்ளோம். ஆதார் கார்டு இல்லாததால், மத்திய அரசின் பல சமூகநலத்திட்டங்களைப் பெற முடியாமல் தவிக்கிறோம் என்று வேதனைப்படுகின்றனர்’’ என்றார்.
ஆனால், இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை என்று ஆதார் க ார்டு வழங்கும்உதய் அமைப்பு மறுக்கிறது.
மேலும், இந்த கிராமத்தில் நடந்தது போல், நாட்டின் பல இடங்களிலும் ஆதார் எண் பதிவு செய்வதில் குழப்பம் நடந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் , உ.பி. மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில், 3 கிராமமக்களுக்கு ஒரே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருநத்து. அலகாபாத் அருகே இருக்கும்கான்ஜசா கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இதேபோல் ஒரே பிறந்ததேதிதான் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.