
நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் தலைமறைவான காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.
காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கு எதிராக, இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அங்கு பணிபுரியும் சில போலீஸ்காரர்களும், தங்கள் துப்பாக்கிகளுடன் வெளியேறி தீவிரவாத இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பட்காம் மாவட்டத்தில், சந்திப்பூரா கிராமத்தில் இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான குடோனில் பாதுகாப்பு பணியில் சையத் நவீத் முஸ்தாக் என்ற போலீஸ் கான்ஸ்டபில் பணியில் இருந்தார். அப்போது, திடீரென 4 நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் நேற்று முன்தினம் தலைமறைவானார்.
சோபியான் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக், அதிக அளவில் கலவரம் நடைபெற்று வரும் தெற்கு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், தலைமறைவான போலீஸ்காரர் முஸ்தாக், ‘ஹிஸ்புல் முஜாகுதீன்’ தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக, உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை உறுதிசெய்துள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் பர்ஹானுதீன் வரவேற்றுள்ளார்.
இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி, காஷ்மீர் அமைச்சர் அல்தாப் புகாரி வீட்டில் பணிபுரிந்த நசீர் அகமது என்ற போலீஸ்காரர், இரு ஏ.கே. ரக துப்பாக்கிகளுடன் தப்பி ஓடினார்.ஆனால், 2016 ஏப்ரலில் சோபியான் மாவட்டத்தில் நடந்த ‘என்கவுண்டரில’ அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.