ராமதாஸ் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார்.? வெளியான முக்கிய அறிக்கை

Published : Jul 12, 2025, 12:39 PM IST
ramadoss pmk

சுருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலையுயர்ந்த சாதனம் என கூறப்படும் இந்த கருவி யார் வைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Wiretapping device in Ramadoss' house : தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் செல்வாக்கு உள்ள கட்சியாக பாமக உள்ளது. வட மாவட்டங்களில் பாமகவின் ஆதரவு பெற்ற கட்சியே வெற்றி பெறும். அந்த அளவிற்கு வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கட்சியாக பாமக திகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டியானது ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளியே வந்தது. இதனையடுத்து பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். தேர்தல் ஆணையத்திலும் கடிதம் கொடுத்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அன்புமணி- ராமதாஸ் மோதல்

இதனையடுத்து தொண்டர்களை சந்திக்கும் வகையில் அன்புமணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாசும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விருதாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை ராமதாஸ் உறுதி செய்தார். தனது வீட்டில், தான் உட்காரும் இடத்தருகே ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை யார், எதற்காக வைத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த கருவி லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஒரு சாதனமாகும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழலில் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி

இது தொடர்பாக பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும் என கூறியுள்ளார். மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் மருத்துவர் அய்யா அவர்களை நேசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை நடத்த வழக்கறிஞர் பாலு கோரிக்கை

அது போக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மை என்ன? ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாட்டாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுனர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என தெரிய வந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!