இந்தியாவில் முழு ஊரடங்கு..? நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி சொன்ன முக்கியமான தகவல்

By karthikeyan VFirst Published Apr 20, 2021, 9:16 PM IST
Highlights

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கிற்கான அவசியமில்லை என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த கடைசி முயற்சி தான் ஊரடங்கு என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி ஆற்றிய உரை:

கொரோனா 2ம் அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க முடியும்.  கொரோனாவின் இப்போதைய பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து முன்கள பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் முன்கள பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

மக்களின் வலியை புரிந்துகொள்கிறேன். உங்களின் கஷ்டங்களில் பங்கெடுக்கிறேன். நம்முடைய பொறுமையை நாம் இழந்துவிடக்கூடாது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். எனவே ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வோம். மத்திய, மாநில அரசுகளும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட தடுப்பு மருந்து உற்பத்தி இப்போது பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன், உற்பத்தியை பெருக்குவது குறித்து தொடர்ந்து பேசிவருகிறேன். நம் நாட்டில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை வேண்டாம்.

குறுகிய காலத்தில் அதிகமான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்திருக்கிறோம். உலகிலேயே குறைந்த விலையில் தடுப்பூசி இந்தியாவில் தான் கிடைக்கிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.  இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏழைகள், நடுத்தர மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும்.

பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களை காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி. புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும். அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தொடர்ந்து இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இப்போது இல்லை.  எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடைசி முயற்சிதான் ஊரடங்கு.  அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

click me!