
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இந்தியர்களுக்கு போடப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் வழங்கப்பட்டுவருகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையடுத்து முதல் நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, முதல் நபராக பிரதமரே போட்டுக்கொண்டார்.
பிரதமருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசி போட்டார். அவருடன் கேரளாவை சேர்ந்த செவிலியரும் உடனிருந்தார். செவிலியர்கள் பிரதமருக்கு ஊசி போடப்போகிறோம் என்றதுமே பதற்றம் லேசாக தொற்றிக்கொள்வது வழக்கம்தான்.
ஆனால் அவர்களது பதற்றத்தை தணித்து அவர்களை சகஜமாக்க, பிரதமர் மோடி அவர்களுடன் நகைச்சுவையாக பேசினார். தனக்கு ஊசி போட்ட நர்ஸை எந்த ஊர் என்று விசாரித்த பிரதமர் மோடி, அந்த செவிலியர் புதுச்சேரி என்றதும் தமிழில் பேச முயற்சித்தார். பின்னர், கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு போடும் ஊசியா போடுகிறீர்கள் என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார். அது நகைச்சுவை என்று புரியாமல், அவர் கேட்டதற்கு, அதெல்லாம்(கால்நடை ஊசி) இல்லை என்று செவிலியர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு சரியாக புரியவில்லை என்பதால், விளக்கமாக எடுத்டுரைத்த பிரதமர் மோடி, அரசியல்வாதிகளுக்கு தோல் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். அதனால் கால்நடைகளுக்கு போடும் பெரிய ஊசி போடப்போகிறீர்களா என்று கேட்டேன் என்று ஜோக் அடிக்க, அதைக்கேட்டு செவிலியர்களும் அங்கிருந்தவர்களும் சிரித்தனர்.
நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சில தினங்களுக்கு பேசியிருந்த நிலையில், அவர் நகைச்சுவை உணர்வுள்ளவர் என்பதை இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் பறைசாற்றியுள்ளார்.