ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பது எப்படி? உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்த பிரதமர் மோடியின் அதிரடி உத்தரவு

By karthikeyan VFirst Published Apr 22, 2021, 5:21 PM IST
Highlights

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, போதுமான அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவைவிட அதிகமாக தேவைப்படுவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூட பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் கேபினட் செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், ஃபார்மசூட்டிகல் மற்றும் வணிகத்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, ஆக்ஸிஜன் விநியோகத்தை துரிதப்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் பேசினார் பிரதமர் மோடி. 

மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவை குறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசித்து அதற்கேற்ப ஆக்ஸிஜனை விநியோகித்துவருவதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுத்துறை ஸ்டீல் ஆலைகள், ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றின் விளைவாக கடந்த சில தினங்களில், ஒருநாளைக்கு 3300 மெட்ரிக் ஆக்ஸிஜன் கூடுதல் கிடைப்பதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு, மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பிரதமர் மோடி, மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை சீராக, தடையின்றி நடப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

click me!