2வது முறையாக கொரோனாவை வென்றார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா... குவியும் வாழ்த்துக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 22, 2021, 1:24 PM IST
Highlights

அந்த மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எடியூரப்பா இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் சமயத்தில், கர்நாடக முதலமைச்சரான  எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

முதன் முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு, மணிபால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடியூரப்பா 8 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு  ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.​அதன் பின்னர் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவத்தை சமாளிப்பதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த எடியூரப்பாவிற்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

​ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பிருந்தே அவருக்கு காய்ச்சல் நீடித்ததை அடுத்து பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எடியூரப்பா இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இரண்டாவது முறையாக கொரோனாவை வெற்றிக்கொண்ட முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

click me!