குஜராத் மாநிலத்தின் சிறிய நகரில் தேநீர் விற்பணையில் தொடங்கிய பிரதமர் மோடியின் அயராத உழைப்பு செங்கோட்டையில் 10 முறை கொடியேற்றிய சாதனைக்கு சொந்தக்காரராக மாற்றியுள்ளது
2014ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மாலை ராஷ்டிரபதி பவன் முற்றத்தில் இந்தியாவின் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவில் பிறந்த ஒருவர் பிரதமர் ஆவது அதுவே முதல் முறை. இந்தியர்களின் கனவுகளுக்கான நம்பிக்கையாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை தைரியம், இரக்கம், தொடர்ச்சியான கடின உழைப்பு ஆகியவற்றின் கலவையாக அர்ப்பணிப்பு மிக்கது. மிக இளம் வயதிலேயே மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். தனது சொந்த மாநிலமான குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகாலம் பணியாற்றிய போது, அடிமட்ட நிலை ஊழியராகவும், அமைப்பாளராகவும், நிர்வாகியாகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
மோடியின் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணம்
பிரதமர் அலுவலகத்திற்கான நரேந்திர மோடியின் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணம், வடக்கு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான வட்நகரில் தொடங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்து மூன்றாண்டுகளுக்கு பிறகு, 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தவர் நரேந்திர மோடி. இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். தாமோதர்தாஸ் மோடிக்கும் ஹிராபா மோடிக்கும் பிறந்த மூன்றாவது குழந்தையாக பிறந்த மோடி. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். முழு குடும்பமும் சுமார் 40 அடிக்கு 12 அடி கொண்ட ஒரு சிறிய மாடி வீட்டில் வசித்து வந்தனர்.
சிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர் மோடி. தினசரி பள்ளி முடிந்ததுமே, வட்நகர் ரயில் நிலையத்தில் இருக்கும் தந்தையின் தேநீர் கடைக்கு சென்று அங்கு அவருக்கு உதவியாக இருப்பார். ‘நான் தேநீர் விற்றவன்’ என்று எப்போதுமே பெருமையாக அவர் கூறுக் கொள்வதுண்டு. சிறுவயதிலேயே விவாதங்களில் ஈடுபாடு கொண்டவர் என மோடியின் பள்ளி ஆசிரியர்களும், புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த மோடி, உள்ளூர் நூலகங்களில் எப்படி பல மணிநேரம் வாசிப்பதில் செலவழித்தார் என்பதை அவரது பள்ளி தோழர்களும் நினைவு கூர்கின்றனர். சிறுவயதில் நீச்சலும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
பள்ளிப்படிப்பிற்கு பிறகு ஜாம்நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர மோடிக்கு ஆசை இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளூர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்த அவரால், அதனை தொடரமுடியவில்லை. பிறகு தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிறகு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார் நரேந்திர மோடி.
என் மனைவி துர்கா எப்படிப்பட்டவர் தெரியுமா? மேடையில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
நரேந்திர மோடிக்கு 13 வயதாக இருந்தபோது, குடும்பத்தினர் அவருக்கு 11 வயதேயான யசோதா பென் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான சில நாட்களில் மோடி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு திருமணமான விஷயம் 2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போதுதான் வெளி உலகிற்கு தெரியவந்தது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான ஆர்வம்
மக்களுக்கு சேவை செய்வதிலும் உதவி செய்வதிலும் நரேந்திர மோடி எப்போதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1965இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, சிறுவயதில் நரேந்திர மோடி, ரயில் நிலையங்களில் ராணுவ வீரர்களுக்கு தானாக முன்வந்து தனது சேவையை வழங்கினார். 1967 குஜராத் வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேவை செய்தார். குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாளர்கள் கேண்டீனில் பணி புரிந்து வந்த மோடி, அங்கிருந்து அப்படியே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார்.
பிரதமர் மோடி தனது கல்லூரி நாட்களில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பிரசாரக் ஆக பணியாற்றினார். 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அடுத்த இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் பயணம் செய்தார். மோடியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு வந்தது வக்கீல் சாகேப்பு என்று பிரபலமாக அறியப்பட்ட லஷ்மணராவ் இமான்தார் என்பவர். மோடியின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவரும் இவர்தான்.
பின்னர் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் முகாமில் மோடி பயிற்சி பெற்றார். சங்பரிவாரில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிப்பதற்காக ஆர்எஸ்எஸ் உறுப்பினர் எவரும் பயிற்சி வகுப்பை முடிக்க வேண்டும் என்பது விதி. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்று அழைக்கப்படும் மாணவர் பிரிவின் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது.
மோடியின் புதிய அத்தியாயம்
எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கத்தில் அவரது பங்களிப்பு மூத்த அரசியல் தலைவர்களைக் கவர்ந்தது. இதன் விளைவாக, அவர் இறுதியாக புதிதாக உருவாக்கப்பட்ட பாஜக கட்சியின் மண்டல அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டு, குஜராத்தில் பாஜகவின் பொதுச் செயலாளராகப் பணியைத் தொடங்கிய மோடியின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான அத்தியாயம் தொடங்கியது. அகமதாபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு முதல்முறையாக வெற்றியைப் பெற்றுத் தந்த மோடி, 1990 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக பாஜக இரண்டாவது இடத்தைப் பிடிக்க உதவினார். 1995 சட்டமன்றத் தேர்தலில் மோடியின் திறமையால், சட்டமன்றத்தில் 121 இடங்களை பாஜக கைப்பற்றியது.
1995 முதல் பாஜகவின் தேசிய செயலாளராக ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து வந்தார். பின்னர், பாஜகவின் நிர்வாக பொதுச் செயலாளராக 1998 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைத்தார். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மோடிக்கு, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது. குஜராத்திற்கு சென்று வேலை பார்க்க மோடிக்கு அன்புக் கட்டளையிட்டார் வாஜ்பாய்.
கட்சிப் பணியை கவனிக்கச் செல்வார்கள் என நினைத்திருந்த மோடிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது பதவி விலகியிருந்த கேஷுபாய் படேலுக்கு பதிலாக புதிய முதல்வராக பொறுபேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மோடி இதனை மறுத்ததாகவும், பின்னர் கட்சியின் கட்டளைக்கு கீழ்படிந்து அதனையேற்றுக் கொண்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி.
குஜராத் முதல்வராக பல்வேறு சர்ச்சைகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டாலும் அம்மாநிலத்தின் அசைக்க முடியாத முதல்வராக தலைவராக உருவானார் மோடி. இந்தியா முழுமைக்கும் குஜராத் மாடல் என்று கைகாட்டுக்கும் அளவுக்கு அம்மாநிலத்தில் அவரது செயல்பாடுகள் இருந்தன்.’
டீ கடை டூ செங்கோட்டை
குஜராத் மாடல் அவரை மீண்டும் டெல்லிக்கு அழைத்து சென்றது. இந்த முறை பிரதமராக. மோடியின் பிராண்ட் அவரை இந்தியாவின் பிரதமராக உயர்த்தியது. மோடிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் பரவலாக எதிர்ப்பு எழுந்தை காணமுடிந்தது. ஒரு காலகட்டத்தில் அவருகு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இன்று அதே அமெரிக்கா அவருக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். அடுத்து 2024 மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அவர் முனைப்பு காட்டி வருகிறார். 72 வயதிலும் இன்றும் அயராது அவர் ஓடிக் கொண்டிருக்கிறார். “எனது நாட்டின் மற்றும் எனது மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதே எனது நோக்கம். இது எனக்கு மிகுந்த ஆற்றலை அளிக்கிறது.” என்கிறார் பிரதமர் மோடி.