அயோத்தியில் ரூ. 11,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!!

By Dhanalakshmi G  |  First Published Dec 28, 2023, 9:22 PM IST

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 ஆம் தேதி அயோத்தி வருகிறார். ரூ 11,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அடிக்கல் நாட்டி, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.  


அயோத்திக்கு பிரதமர் மோடி வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வருகிறார். அப்போது, அங்கு புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ​​விமான நிலையத்துடன், அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இது தவிர 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அயோத்தியில் ரூ.2180 கோடி மதிப்பிலான டவுன்ஷிப் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் அகலமான மற்றும் அழகான சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுதவிர உத்தரபிரதேசத்தில் ரூ. 4600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Tap to resize

Latest Videos

அயோத்தி தாம் ரயில் நிலையம் திறப்பு: 
அயோத்தி தாம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி, டிசம்பர் 30, அன்று காலை 11:15 மணியளவில் திறந்து வைக்கிறார். இதனுடன், 2 புதிய அமிர்த பாரத் மற்றும் 6 வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதனுடன் மேலும் பல ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை மதியம் 12:15 மணியளவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

உ.பி.யில் ரூ.15700 கோடி மதிப்பிலான திட்டங்கள்:
பிற்பகல் 1 மணியளவில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், உத்தரபிரதேசத்தில் ரூ.15,700 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.

அயோத்தி விமான நிலையம்
அயோத்தியில் உள்ள நவீன விமான நிலையத்தின் கட்டம்-1 (விமான நிலையத்தின் புதிய பெயர் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது) 1450 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டிடத்தின் பரப்பளவு 6500 சதுர மீட்டர் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகள் வந்து செல்லலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டிடத்தின் முகப்பில் அயோத்தி ராமர் கோயிலின் கட்டிடக்கலை பிரதிபலிக்கிறது. 

அயோத்தி தாம் ரயில் நிலையம்: 

அதே நேரத்தில், அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் முதல் கட்டப்பணிகள் ரூ.240 கோடிக்கு மேலான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளைக் கொண்ட இந்த நவீன ரயில் நிலையக் கட்டிடத்தில் லிப்ட், எஸ்கலேட்டர், ஃபுட் பிளாசா, வழிபாட்டுத் தேவைகளுக்கான கடைகள், ஆடை அறை, குழந்தைகள் பராமரிப்பு அறை, காத்திருப்பு கூடம் என அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. 

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்:
அயோத்தி தாம் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் மற்றும் மால்டா டவுன்-சர் எம். விஸ்வேஸ்வரயா டெர்மினஸ் (பெங்களூரு) இடையே இயக்கப்படும். அம்ரித் பாரத் ரயில் என்பது AC அல்லாத பெட்டிகளைக் கொண்ட LHB ரயிலாகும். இந்த ரயிலில் இருபுறமும் என்ஜின்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் கவர்ச்சிகரமான இருக்கைகள், சிறந்த லக்கேஜ் ரேக், மொபைல் ஹோல்டருடன் கூடிய சார்ஜிங் பாயின்ட், எல்இடி விளக்கு, சிசிடிவி, பொது தகவல் அமைப்பு போன்ற சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

6 புதிய வந்தே பாரத் ரயில்கள்:
ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அவை ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களாகும்.

அயோத்தியில் 4 புதிய பாதைகள்:

அயோத்தியில் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட நான்கு அகலமான சாலைகள் ராம்பத், பக்திபாத், தரம்பத் மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி பாதை ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார். இது தவிர, அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொது இடங்களை அழகுபடுத்தும் பல திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

click me!