
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்ததால் ஏற்பட்ட வர்த்தகப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிய காரணத்தால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்களின் மீது 50% வரை வரியை விதிக்கும் நடவடிக்கையை எடுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியா ரஷ்யா மற்றும் சீனாவுடன் தனது வர்த்தகத்தை அதிகரிக்க முடிவெடுத்தது.
இந்த நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்தியாவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வந்த டிரம்ப், திடீரென, “மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்” என்று கூறினார். மேலும், தொலைபேசியில் மோடியைத் தொடர்புகொண்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் பேசியதாவது:
“அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் வரும் நாட்களில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. இந்தியா மீது டிரம்ப் சில அதிருப்திகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நேர்மறையான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இரு தலைவர்களும் சந்திப்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்ப்பீர்கள். அவர்கள் மிகவும் நேர்மறையான கருத்தைக் கொண்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பைப் பேணுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்.”
மேலும், “குவாட் (Quad) உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
டிரம்ப்-மோடி சந்திப்பு உறுதியாகும் பட்சத்தில், அது உலக அரசியல் மற்றும் வர்த்தகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.