
ஆசியாவிலேயே மிக உயரமான, 77 அடி வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்தச் சிலை தெற்கு கோவா மாவட்டம், கனகோனாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மடத்தின் 550 ஆண்டுகால மரபு நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த மடம் நாட்டின் பழமையான மடங்களில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக, மதம் கடந்து உலகம் முழுவதும் மதிப்பு மிக்க இடத்தைப் பெற்றுள்ளது.
மடத்தின் மத்தியக் குழுத் தலைவர் ஷிரினிவாஸ் டெம்போ கூறுகையில், இந்த மடம் சரஸ்வத் மற்றும் இந்து சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அடையாளச் சின்னமாகப் போற்றப்படுகிறது.
கோவாவைத் தீர்த்த யாத்திரை தளமாக மாற்ற வேண்டும் என்று ஸ்ரீமத் வித்யாதிஷ் தீர்த்த ஸ்ரீபத் வாதேர் சுவாமிஜி விரும்பியதையும் அவர் அப்போது நினைவு கூர்ந்தார்.
உலகப் புகழ்பெற்ற இந்தியச் சிற்பி ராம் சுதார் தான் இந்த ராமர் சிலையை வடிவமைத்துள்ளார். மரியாதா புருஷோத்தமரின் இலட்சியங்களைப் போற்றும் வகையில், ஒரு இராமாயண கருப்பொருள் பூங்காவும் இராமரின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், 10,000 சதுர அடி பரப்பளவில் ராமர் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக டெம்போ தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகத்தில், ராமர் குறித்த அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், விஜயநகரப் பேரரசு காலத்து நாணயங்கள் மற்றும் பல்வேறு பாணிகளில் வரையப்பட்ட இராமரின் ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மடத்தின் 550வது ஆண்டு விழா (சர்தா பஞ்சசதமஹோத்சவம்) இன்று (நவம்பர் 27) முதல் டிசம்பர் 7 வரை 11 நாட்களுக்கு பார்டகாலில் நடைபெறுகிறது. இந்த விழாக்களில் ஆன்மீகம், கலாசாரம் மற்றும் சமூக நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த நிகழ்வை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், ஸ்ரீ பாலிமாரு மடத்தின் மடாதிகாரியான ஸ்ரீமத் வித்யாதிஷா தீர்த்த சுவாமிஜி, ஸ்ரீ சவுன்ஸ்தான் கௌடபாடாச்சாரியார் கவாலே மடாதீஷ் ஸ்ரீமத் சிவானந்த சரஸ்வதி சுவாமிஜி மற்றும் ஸ்ரீ சித்ராபூர் மடாதீஷ் ஸ்ரீமத் சத்யோஜத் சங்கராச்ரம் சுவாமிஜி உள்ளிட்ட ஆன்மீகப் பெரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மடம் தனது நீண்ட வரலாற்றில், ஆன்மீகம், கல்வி, மற்றும் சுகாதார சேவைகள் மூலம் அதன் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமன்றி, பொது மக்களுக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று டெம்போ கூறினார்.