
டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் நிலவும் மோசமான காற்று மாசுப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண தங்களிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினையை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
"நாங்களும் டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிப்பவர்கள்தான்; இந்த அபாயகரமான சூழலை நாங்களும் எதிர்கொள்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“நீதித்துறை மந்திரக்கோலை எடுத்து மாயாஜாலம் செய்து சூழலை சரிசெய்துவிட முடியுமா? இந்தப் பிரச்சினை தலைநகர் டெல்லிக்கு ஆபத்தானது என்று எங்களுக்கும் தெரியும்... உடனடியாகச் சுத்தமான காற்றைப் பெறுவதற்கு நாங்கள் என்ன உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்று நீங்களே சொல்லுங்கள்," என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆண்டுதோறும், குளிர்காலத்தில் காற்று மாசுப் பிரச்சனை எழுவது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது. "இந்தப் பிரச்சினை தீபாவளிப் பண்டிகை காலத்தில் ஒரு சடங்கு போல ஆகிவிட்டது. குளிர்காலத்திற்குப் பிறகு இது மறைந்துவிடுகிறது. நாம் இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்," என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
டெல்லி-என்சிஆர் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் காற்று மாசுப் பிரச்சனை ஒரு சுகாதார அவசரநிலையாக (Health Emergency) உருவெடுத்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
காற்று மாசு பிரச்சினைக்குத் தீர்வு காணும் திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
மூத்த வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டதும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் தொடர்ச்சியாக விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி காந்த் உறுதியளித்தார்.
பின், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை திங்கட்கிழமைக்கு (டிசம்பர் 1) ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.