
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடிபோதை வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது. கணவன் ஆத்தரத்தில் மனைவியைத் தூக்கிக் கீழே போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு ராம்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதம் படி ஜாரியா பகுதியில் நடந்துள்ளது.
25 வயதான கணவர் உபேந்திர பரிஹா, தனது வீட்டில் போதையில் இருந்தபோது, அவரது மனைவி ஷில்பி தேவியும் (22) போதையில் வீடு திரும்பியுள்ளார்.
மனைவி போதையில் வந்ததைக் கண்ட உபேந்திரா, இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படக் காரணமாகியுள்ளது.
இந்தச் சண்டை முற்றியபோது, உபேந்திரா ஆத்திரமடைந்து ஷில்பியைத் தாக்கத் தொடங்கினார். திடீரென அவர் ஷில்பியைத் தூக்கி பலமாகத் தரையில் அறைந்துள்ளார். இதனால் ஷில்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மனைவி இறந்ததையடுத்து, கணவர் உபேந்திர பரிஹா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை மதியம் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த ஷில்பி தேவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மேதினி ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (Medinirai Medical College and Hospital) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.