
கூகுளின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான 'Nano Banana'-வைப் பயன்படுத்தி, மிகவும் தத்ரூபமான போலி அடையாள அட்டைகளை உருவாக்க முடியும் என்பதை ஒரு பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் செய்து காட்டியுள்ளார். இது, AI தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த அச்சத்தைக் கிளப்பியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஹர்வீன் சிங் சாத்தா (Harveen Singh Chadha), கூகுளின் ஏ.ஐ மாடலைப் பயன்படுத்தி, "Twitterpreet Singh" என்ற பெயரில் போலியான பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) அட்டைகளை உருவாக்கினார்.
அந்தப் போலி ஆவணங்களின் படங்களை அவர் ஆன்லைனில் பகிர்ந்து, ஏ.ஐ மூலம் ஏற்படும் கடுமையான பாதுகாப்புக் குறைபாட்டை வெளிப்படுத்தினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "Nano Banana சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால், அதுவே ஒரு பிரச்சனையாகவும் மாறுகிறது. அதில் மிகத் துல்லியமான போலி அடையாள அட்டைகளை உருவாக்க முடியும். படங்களை சரிபார்க்கும் அமைப்புகள் இவற்றை அடையாளம் காண்பதில் கட்டாயம் தோல்வியடையும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேம்பட்ட Gen AI கருவிகள் மூலம் மோசடி ஆவணங்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள், டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்பு அமைப்புகள் குறித்து கடுமையான கவலையை எழுப்பியுள்ளது.
கூகுளின் ஜெமினி (Gemini), AI உருவாக்கிய படங்களுக்கு SynthID எனப்படும் டிஜிட்டல் கைரேகைகளைச் சேர்க்கிறது என்றும், அதை Gemini செயலி மூலம் சரிபார்க்கலாம் என்றும் ஒரு பயனர் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹர்வீன், "அடையாளச் சான்றுகளை Gemini செயலி மூலம் யாரும் ஸ்கேன் செய்யப் போவதில்லை" என்று கூறினார்.
மற்றொரு பயனர், போலி அடையாள அட்டைகள் அதிகாரப்பூர்வ தரவுகளுடன் பொருந்தாது என்றும், சரிபார்ப்பதற்காக க்யூ.ஆர். குறியீடு (QR code) போன்றவை உள்ளன என்றும் வாதிட்டார். இதற்கு ஹர்வீன், "நீங்கள் ஒரு ஹோட்டல் அல்லது விமான நிலையத்தில் ஆதாரைக் காட்டும்போது, அவர்கள் உண்மையில் அதை ஸ்கேன் செய்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.