
நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் (UIDAI) கூறியுள்ளது. ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற முயற்சிக்கும் மோசடிகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளது.
இறந்தவர்களின் தரவுகளைப் பெறுவதற்காக, ஆதார் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்திய தலைமைப் பதிவாளர் (Registrar General of India - RGI), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், பொது விநியோகத் திட்டம் (PDS), தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Program) ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் இறந்தவர்களின் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இறந்தவர்கள் குறித்த தரவுகளைப் பெற, நிதி நிறுவனங்கள் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் ஆதார் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
ஒரு ஆதார் எண் ஒருபோதும் வேறொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படாது. இருப்பினும், ஒரு நபர் இறந்த பிறகு, அவரது ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்வதன் மூலம் மோசடிகளைத் தடுக்க முடியும். அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக இறந்தவர்களின் ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும்.
இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் பதிவு அதிகாரிகளிடமிருந்து இறப்புச் சான்றிதழைப் பெற்ற பிறகு, குடும்ப உறுப்பினர்கள் myAadhaar போர்ட்டலில் (myAadhaar Portal) இந்தத் தகவலைப் பதிவு செய்யுமாறு ஆதார் ஆணையம் ஊக்கமளிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆதார் ஆணையம் "குடும்ப உறுப்பினரின் இறப்பைத் தெரிவித்தல்" என்ற வசதியை myAadhaar போர்ட்டலில் அறிமுகப்படுத்தியது.
சிவில் பதிவு முறையைப் (Civil Registration System - CRS) பயன்படுத்தும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கிறது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆதார் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குடும்ப உறுப்பினர், தனது ஆதார் விவரங்களைக் குறிப்பிட்டு, இறந்தவரின் ஆதார் எண், இறப்புப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை ஆதார் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்த்த பிறகு, இறந்த நபரின் ஆதார் எண்ணைச் செயலிழக்கச் செய்வது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.