
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குச் செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
முதலில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி டிசம்பர் 15 முதல் 16 வரை ஹஷிமைட் இராச்சியமான ஜோர்டானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஜோர்டான் மன்னரைச் சந்தித்து, இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையேயான ஒட்டுமொத்த உறவுகளைப் பற்றி ஆய்வு செய்வதுடன், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலியின் அழைப்பை ஏற்று, டிசம்பர் 16 முதல் 17 வரை பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
எத்தியோப்பிய பிரதமருடன் இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இறுதிப் கட்டமாக, சுல்தான் ஹைத்தம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி டிசம்பர் 17 முதல் 18 வரை ஓமன் சுல்தானகத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் மோடி ஓமனுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் ஆகும்.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே ஒரு விரிவான மூலோபாயக் கூட்டுறவு உள்ளது. வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள இருதரப்பு கூட்டுறைவை விரிவாக ஆய்வு செய்யவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பிரதமரின் இந்த நான்கு நாள் பயணம், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டையும், செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.