ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்... பிரதமர் மோடி கருத்து!!

By Narendran SFirst Published May 20, 2022, 2:30 PM IST
Highlights

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த மாதத்துடன் பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுத்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து. பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். முக்கியமான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சில கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நாம் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது, அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஜனசங்கத்தின் காலத்தில், நம்மைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இருந்த போதிலும், நமது தொண்டர்கள் கஷ்டப்பட்டு தேசத்தைக் கட்டியெழுப்பி உள்ளனர்.

Latest Videos

அதிகாரத்தில் இல்லை என்றாலும் தொண்டர்கள் தேசபக்தியுடன் இருந்தனர். அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நாம் நிர்ணயித்து வருகிறோம். அனைத்து சவால்களையும் கடந்து இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைக்க வேண்டும். இந்தியா கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது. இப்போது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், கனவை நிறைவேற்ற வேலை செய்ய விரும்புகிறான். இதனால் அரசின் பொறுப்புகள் பெருமளவில் அதிகரித்து உள்ளது. உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. 2014ல் நாட்டு மக்களிடையே பாஜக மீண்டும் இழந்த நம்பிக்கையை மீண்டும் விதைத்தது. நாட்டு மக்கள் இப்போது பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

அவர்களின் நம்மைக்கையை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இந்தியாவின் வளமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவில் இணைக்க வேண்டும். குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார். 

click me!