நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து தீவிர விசாரணை நடக்கிறது: மக்களவையில் மோடி உறுதி

By SG Balan  |  First Published Jul 2, 2024, 4:32 PM IST

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கூறியிருக்கிறார்.


நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நரேந்திர மோடி பதிலுரை ஆற்றினார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியையும் இந்தியா கூட்டணியையும் கடுமையாக சாடிப் பேசினார்.

எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, "மணிப்பூர் மணிப்பூர்" என்றும் "நீதி வேண்டும் நீதி வேண்டும்" என்றும் முழக்கமிட்டனர். ஜனநாயகத்தைக் "காப்பாற்று காப்பாற்று" என்று தமிழிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

Latest Videos

undefined

ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம்சாட்டிய மோடி, உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதையும் அவரது பெயரைச் சொல்லாமல் விமர்சித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்களுக்கு மத்தியில் விடாப்பிடியாக பேசிக்கொண்டே போன மோடி, சுமார் இரண்டரை மணிநேரம் தனது உரை நீட்டி முழக்கினார்.

ஹத்ராஸில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதற்கும் இரங்கல் தெரிவித்தார்.

நீதி வேண்டும்! மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்.. பதில் அளித்த பிரதமர் மோடி.. என்ன பேசினார்?

மோடியின் தனது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்படி திறன்படி செயல்பட்டோம் என்பதை மக்கள் அறிவார்கள். அதனால்தான் 3வது முறையாக நாடுக்குச் சேவையாற்ற மக்கள் எங்களுக்குத் தான் வாய்ப்பு அளித்துள்ளனர்.

ஐயோ! இந்துக்களை இப்படி பேசிட்டாரே... ராகுல் காந்தியை உடனே மன்னிப்பு கேட்கச் சொல்லும் ஜே.பி.நட்டா!

நாட்டு வளர்ச்சிக்கான கொள்கையும் சிறந்த நிர்வாகமும் தான் எங்கள் ஒரே இலக்கு. ஏழை மக்களின் நலனுக்காகச் செயல்பட்டதற்காக மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது தெளிவாகத் தெரிகிறது.

2014ஆம் ஆண்டு வரை இந்த நாடு வளர்ச்சி அடையாது என்றே மக்கள் நினைத்திருந்தனர். நாங்கள் நாட்டு வளர்ச்சிக்கான நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறோம். வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரம் தேசத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன் இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.

2014 க்கு முன்பு ஊழல் அதிகம். காங்கிரஸ் ஆட்சியின் ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சியில் இந்தியாவில் இருந்து ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. 2014 க்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல்வேறு வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளது. மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக 3 மடங்கு உத்வேகத்துடன் பணியாற்ற உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த 4 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

இனி வரவிருக்கும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானாவிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். பாஜகவைத் தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. காங்கிரஸ் தனது தோல்வியை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

1984ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் ஒரு முறை கூட  250 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. 99 இடங்களில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ் 100க்கு 99 பெற்றுள்ளது போல பேசுகிறார்கள். 543 க்குத் தான் 99 பெற்றிருக்கிறார்கள். தேர்தலில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் உலக சாதனையே படைத்திருக்கிறது.

இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்க வேண்டும் என்பதே மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்துகொண்டு கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் மக்கள் விட்டுவிட்டார்கள். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைக் கவரும் ஒட்டிண்ணி போல மாறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி பால மாநிலங்களில் அபாயகரமான விளையாட்டை விளையாடி வருகிறது. நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிட முயற்சி செய்கிறது. நேற்று மக்களவையில் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள் அரங்கேறின. சிலர் சிறுபிள்ளைத்தனமாக உண்மையை மறைத்து பிறரைக் குற்றம்சாட்டிப் பேசுகிறார்கள்.

ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தினார். அக்னிவீர் திட்டம் பற்றியும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பற்றியும் பொய் பேசியிருக்கிறார். சாவார்க்கர் மற்றும் பிற்படுத்தபட்ட மக்களை இழிவாகப் பேசிவிட்டார்.

இந்துக்களை அவமதிப்பதைத் பொறுத்துக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி இந்துக்களைப் புண்படுத்திவிட்டார். அவரை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்துக்களை வன்முறையாளர்கள் என்று பேசுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாசாரமா? ஜனநாயகத் தழைக்க காரணமாக இருப்பது இந்து மதம்தான்.

இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்த சதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அரசியல் லாபத்திற்காக வழிபாட்டுக்கு உரிய கடவுளின் உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக இந்து மதத்தை அவமதித்து கேலி செய்கின்றனர். நாடாளுமன்றத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்வது சரியானது அல்ல. இந்துகள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது.

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் காரணமாக ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகளைக் கூட வாங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் காரணமாகத்தான் ராணுவ விமானங்களை வாங்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. காங்கிரஸ் படைகள் பலவீனப்படுத்த நினைத்தது. பாஜக ஆட்சியில் ராணுவம் போர்ச் சூழலை எதிர்க்கொள்ள ஆயத்தமாக இருக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் இழைத்தவர்களை ஒருபோதும் தப்பிக்க முடியாது.

சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும். எமது அரசும்  குரலும் வலிமையாக உள்ளது.

Hathras Stampede : ஹத்ராஸ் நகர மத நிகழ்வு.. கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

click me!