வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு எப்போது நனவாகும் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் ரூ.23,800 கோடிக்கு மேல் மதிப்புடைய என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை அர்ப்பணிப்பதும், பல ரயில்வே மற்றும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடைந்தால் மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் கனவு நனவாகும் என்று குறிப்பிட்டார். இத்தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்றைய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்களுக்காக சத்தீஸ்கர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரதம் நேரடி, சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பிற்கான இந்த ஆண்டு ஒதுக்கீடு ரூ.10 லட்சம் கோடி என்றும், இது ஆறு மடங்கு அதிகரிப்பு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரயில், சாலை, விமான நிலையம், மின் திட்டங்கள், போக்குவரத்து, ஏழைகளுக்கான வீடுகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆகிய திட்டங்களில் எஃகின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டை எஃகு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
நாகர்னாரில் மிகவும் நவீன எஃகு ஆலைகளில் ஒன்றைத் திறந்து வைத்து பேசிய பிரதமர், "சத்தீஸ்கர் ஒரு பெரிய எஃகு உற்பத்தி மாநிலமாக இருப்பதன் நன்மைகளை அறுவடை செய்து வருகிறது" என்று கூறினார். இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எஃகு நாட்டின் வாகன உற்பத்தி, பொறியியல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறைகளுக்கு புதிய ஆற்றலை வழங்கும் என்று அவர் கூறினார்.
"பஸ்தாரில் உற்பத்தி செய்யப்படும் எஃகு, ராணுவத்தை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு ஏற்றுமதியையும் அதிகரிக்கும்" என்று பிரதமர் மோடி கூறினார். பஸ்தார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், "புதிய எஃகு ஆலை மத்திய அரசால் பஸ்தர் போன்ற முன்னோடி மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்றார்.
போக்குவரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட பிரதமர், சத்தீஸ்கரில் பொருளாதார வழித்தடம் மற்றும் நவீன நெடுஞ்சாலைகள் குறித்து பேசினார். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சத்தீஸ்கரின் ரயில்வே பட்ஜெட் சுமார் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ரயில் பாதையின் பரிசை தரரோகி நகரம் பெறுவதாக அவர் கூறினார். ஒரு புதிய மின்சார ரயில் நாட்டின் ரயில்வே வரைபடத்தில் தரோகியை இணைத்துள்ளது என்றும், இது தலைநகர் ராய்ப்பூருக்கு பயணம் செய்வதை எளிதாக்குவதாகவும், ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாடா இடையே ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் தளவாட செலவுகளைக் குறைத்து பயணத்தை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் தகவல்!
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ரயில் பாதைகளை 100% மின்மயமாக்கும் பணியை சத்தீஸ்கர் முடித்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலும் மாநிலத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரின் 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் 7 நிலையங்களை புனரமைக்க ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிலாஸ்பூர், ராய்ப்பூர் மற்றும் துர்க் நிலையங்களுடன், இன்று ஜக்தல்பூர் நிலையமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், ஜக்தல்பூர் நிலையம் நகரின் முக்கிய மையமாக மாறும். மேலும் இங்குள்ள பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்படும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் 120 க்கும் மேற்பட்ட நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்ற அவர், இன்றைய திட்டங்கள் வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்திற்கு அரசு தனது ஆதரவைத் தொடரும், மாநிலத்தில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும், நாட்டின் சூழலை மாற்றுவதில் மாநிலம் தனது பங்கை வகிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.