
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-ஐ பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த மசோதா, e-sports வளர்ச்சிக்கான புதிய தளமாக இருக்கும், அதேசமயம் பண அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் சமூகத்தை காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டார்.
மசோதா முதலில் லோக்சபாவில் எளிதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, மறுநாளே ராஜ்யசபாவிலும் அங்கீகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அரசு உறுதியுடன் முன்னேறியது.
மோடி தனது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில், “இந்த மசோதா இந்தியாவை கேமிங், புதுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் மையமாக மாற்றும். ஊக்குவிக்கும். அதே நேரத்தில் ஆன்லைன் பண விளையாட்டுகளின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்றும்,” என்று பதிவிட்டார்.
இந்த மசோதா, ஆன்லைன் பண விளையாட்டுகள் மற்றும் அவற்றின் விளம்பரங்களைத் தடை செய்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட இந்த விளையாட்டுகளுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை செயல்படுத்தக் கூடாது என்ற சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் சமூக கேம்கள் மற்றும் e-sports-க்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
மசோதாவை அறிமுகப்படுத்திய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “மூன்று ஆண்டுகளாக தொழில் வல்லுநர்களுடன் ஆலோசித்து, மக்கள் சேமிப்புகளை காப்பாற்றும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது,” என்று கூறினார். மேலும், e-sports-க்கு அரசு புதிய திட்டங்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் என்றும் கூறினார்.
சமூகத்தில் பண அடிப்படையிலான கேம்கள் ஏற்படுத்தும் நஷ்டம், முதலீட்டு பலன்களை விட அதிகம் என அரசு வலியுறுத்தியது. இதனால் புதிய சட்டம் கடுமையான ஒழுங்குகள் மற்றும் அபராதங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் ஆன்லைன் கேமிங் துறைக்கு பாதுகாப்பான, கட்டுப்பட்ட வளர்ச்சி பாதை அமைந்துள்ளது.