
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்களின் தாமதத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் வாதம்
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு அல்லது தேசத்திற்கு எதிராக இருந்தால் நிறுத்தி வைக்கப்படும். எல்லா விவகாரங்களிலும் ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு" என வாதிட்டார்.
மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் கூடாது என்றும், அரசியலமைப்பு பிரிவு 200-ன் கீழ் "முடிந்தவரை விரைவில்" (as soon as possible) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறை இதில் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார். ஆளுநர் ஒரு மத்திய அரசின் பிரதிநிதி என்றும், மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் கேள்வி
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு இல்லையென்றால், ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும். ஆளுநரின் செயல்படாத தன்மைக்கு எதிராக மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியுமா? தவறு நடந்திருந்தால், தீர்வு காணப்பட வேண்டும்" என கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றம் அரசியல்சட்டத்தின் ஒரு அங்கம் என்றும், அரசியல்சட்டப் பணியாளர் சரியான காரணமில்லாமல் செயல்படவில்லை என்றால், நீதிமன்றம் நாங்கள் சக்தியற்றவர்கள் என்று கூற முடியுமா என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாற்று வழிகள்
ஆளுநரின் தாமதத்திற்கு உடனடியாக நீதிமன்றத்தை நாடாமல், பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை அணுகி தீர்வு காணலாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். தொலைபேசி உரையாடல் வாயிலாகவும், அரசியல் முயற்சிகளின் மூலமாகவும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும், நீதித்துறை மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா, முடியாதா என்ற சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.