
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு மிஸ்டு கால் கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுப்போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி,பீட்டா , இந்திய விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படாமல் இருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மீண்டும் போட்டியை நடத்த அனுமதி கோரியும், அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்தியஅரசை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த உடனடியாக அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என இன்று வலியுறுத்தினார்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஏதும் செய்ய இயலாது, மாநில அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதனால், தமிழகத்தில் போராட்டம் வலுப்பெற்று, அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்குப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில், அவசரச்சட்டம் பிறப்பிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் அலுவலகத்துக்குமிஸ்டு கால் கொடுத்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
இதற்கான செய்தியை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் அனைவரும்ஒருவொருக்கு ஒருவர் தெரிவித்து, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு மிஸ்டுகால் கொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.