
தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவர அதிகாரம் இருக்கிறது அதில் உச்சநீதிமன்றமும் தலையிடாது என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் பெரிய எழுச்சியாக மாறி வருகிறது. இதன் விளைவும் முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்திக்கும் நிலை ஏற்பட்டது.
மோடியுடனான சந்திப்பில் தமிழக பிரச்சனைகள் குறித்து காது கொடுத்து கேட்டார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது, ஆகவே மாநில அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் மத்திய அரசின் ஆதரவு உண்டு என்று மோடி தெரிவித்ததாக முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தமிழக அரசின் நிலை என்ன என்று விரைவில் அறிவிக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். இதன் முடிவு அவசர சட்டமா என்கிற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது
.ஒருவேலை தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதிகள் துறை அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை ஆலோசனை கேட்டுள்ளது.
இது குறித்து பதிலளித்துள்ள அரசின் தலைமை வழக்கறிஞர் ரோத்தகி தமிழக அரசு அவ்வாறு அவசர சட்டம் கொண்டு வர அதிகாரம் இருக்கிறது.
அப்படி சட்டம் கொண்டுவந்தால் உச்சநீதிமன்றம் அதில் தலையிட வாய்ப்பில்லை, ஆனால் அந்த சட்ட சரத்தில் காளைகளை துன்புறுத்தாவண்ணம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் அவசர சட்டம் சம்பந்தமாக நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே கருத்து தெரிவித்துள்ளதால் அவசர சட்டம் நிறைவேற்ற தடையேதும் இருக்காது எனபது வெளிப்படையாகியுள்ளது.