பிரதமர் மோடி தனது 3 நாட்கள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார்
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக கடந்த 19ஆம் தேதி மாலை பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்ற பிரதமர் மோடி, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அன்றைய தினம் இரவு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார். மறுநாள் ஜனவரி 20ஆம் தேதி காலை விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய வேட்டி, சட்டை, பட்டு அங்கவஸ்திரம் அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு கம்ப ராமாயண சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாராயணத்தை கேட்டு மகிழ்ந்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதம் இருந்து வருகிறார். அத்துடன், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். குறிப்பாக, ராமருடன் தொடர்புடைய கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், திருச்சியில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தக் கடலில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து புனித நீராடினார். அங்கிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பின்னர், ராமநாத சுவாமி, பர்வதவர்தினி அம்பாள் சந்திதிகளில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
ராமநாத சுவாமி கோயிலில் இருந்து வெளியே வந்த பிரதமர், அங்கிருந்து ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று நேற்றிரவு தங்கினார். தொடர்ந்து இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு தனுஷ்கோடி சென்றார். அங்குள்ள நினைவுச்சின்னத்தில் மரியாதை செய்தார். பின்னர் கடற்கரையை சுற்றிப்பார்த்த அவர், பூக்கள் தூவி வழிபட்டார். மேலும், கடற்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பிரதமர் மோடி பிராணாயாமம் செய்தார். அதன்பிறகு, அங்கிருந்து கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், ராமேஸ்வரத்து கார் மூலம் திரும்பிய பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். நாளைய தினம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.