
இந்தியா 2025ஆம் ஆண்டில் 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது நாட்டின் விவசாய வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்'தின் 128வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் விவசாயத் தன்னிறைவு நோக்கி நாடு சீராக முன்னேறி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
"விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை ஒப்பிடும்போது, இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்துள்ளது," என்று பிரதமர் மோடி கூறினார்.
கோவை இயற்கை விவசாயக் கண்காட்சியை நினைவு கூர்ந்த பிரதமர், இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்ட இளைஞர்களைப் பாராட்டினார்.
"இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் கோவை சென்றிருந்தேன். இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
"பல இளைஞர்கள், அதிக கல்வித் தகுதியுடைய தொழில் வல்லுநர்கள் இப்போது இயற்கை விவசாயத் துறையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்," என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னதாக, நவம்பர் 19 அன்று தமிழ்நாட்டின் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு 'பிஎம்-கிசான் சம்மான் நிதி'யின் 21வது தவணையை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், அவர் இயற்கை விவசாயக் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
அவர் தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டிலும் கலந்துகொண்டு, உள்ளூர் விவசாயிகளைச் சந்தித்து உரையாடினார். இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு விவசாயப் பொருட்கள் மற்றும் பயிர்களை அவர் பார்வையிட்டார்.