பிரதமர் மோடி இந்து அல்ல என பீகார் மாநிலம் ஜன் விஸ்வாஸ் பேரணியில் பேசிய லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. அந்த வகையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜன் விஸ்வாஸ் என்ற பெயரில் தோழமை கட்சிகளை இணைத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். கடந்த மாதம் 20ஆம் தேதி அம்மாநிலம் முசாபர்பூரில் இருந்து தொடங்கிய யாத்திரை நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஆர்ஜேடி நடத்தும் ஜன் விஸ்வாஸ் மகா பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “நாட்டில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அது பீகாரில் இருந்து தொடங்கி நாடு முழுவதையும் அடைகிறது. நமது நாட்டில் கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வெறுப்பும், வன்முறையும், ஆணவமும், இன்னொரு பக்கம் அன்பும், மரியாதையும், சகோதரத்துவமும். ‘வெறுப்பு சந்தையில் அன்பின் கடை’ இந்தியக் கூட்டணியை ஒரே வாக்கியத்தில் இப்படி புரிந்து கொள்ளலாம். வெறுப்புக்கு மிகப்பெரிய காரணம் அநீதி.” என்றார்.
ஜன் விஸ்வாஸ் பேரணியில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “ஒருபுறம் உத்தரபிரதேசத்தில் 80இல் வெற்றி; பீகாரும் 40இல் வெற்றி முழக்கத்தை எழுப்புகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 120 தொகுதிகளை இழந்தால் பாஜகவின் கதி என்ன?” என கேள்வி எழுப்பினார். ஒரு பக்கம், அரசியல் சாசன பாதுகாவலர்கள் இன்னொரு பக்கம். அரசியலமைப்பை அழிப்பவர்கள். 2024 தேர்தல் அரசிலமைப்பை காப்பதற்கான மிகப்பெரிய போர் எனவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி 3 நாட்களில் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம்!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “இன்று இந்திய கூட்டணி பாஜகவை போர்க்களத்தில் எதிர்கொள்கிறது. மத்திய அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டி பார்க்கிறது. ஆனால், அதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.” என சூளுரைத்தார். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் அவரை தேஜஸ்வி யாதவ் சேர்த்துக் கொள்ளக் கூடாது எனவும் கார்கே வலியுறுத்தினார்.
“பீகார் பல சிறந்த ஆளுமைகளை அளித்துள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இங்கிருந்து நாடு முழுவதும் ஒரு செய்தி சென்றது. பீகாரின் கருத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது.” என ஆர்ஜேடி தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி இந்து அல்ல என்றார். “பிரதமர் மோடி இந்து அல்ல; அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது.” என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்து பேசினார்.