ஆந்திராவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர் பனவாது தேஜாஸ்வி. 27 வயதான இவருக்கு அண்மையில் மத்திய கல்வி அமைச்சகத்திலிருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. பிரதமர் அவரை டெல்லிக்கு அழைப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
அதாவது, வரும் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடியுடன் அமர்ந்து கண்டுகளிக்க பிரதமர் சார்பாக அழைப்பு வந்துள்ளது.
விஜயவாடாவில் உள்ள நுன்னா என்ற இடத்தில் பிறந்த தேஜாஸ்வி 2013ஆம் ஆண்டு EAMCET தேர்வில் வெற்றி பெற்று, விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். அப்போதே ஆறு தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். முதுகலை மருத்துவப் படிப்பை ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து, அதிலும் தங்கப் பதக்கம் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு: கேரள பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இந்த அழைப்பைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தேஜாஸ்வி. இதுபற்றி அவர் கூறுகையில், “இப்படி ஒரு அரிதான அழைப்பு வந்திருப்பதைப் பார்த்தவுடன் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் பூரிப்படைந்தார்கள். என் பெற்றோரும் சகோதரிகள் தீக்ஷிதா, ரேவதி ஆகியோர் எனக்கு அளித்துவரும் ஆதரவை நான் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“நானும் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் தேஜாஸ்வி குடியரசு தின அணிவகுப்பு பிரதமருடன் பார்த்து ரசிக்கும் தருணம் வருவதற்காகக் காத்திருக்கிறோம்” என்று தேஜாஸ்வியின் தந்தை வெங்கடேஸ்வர ராவ் கூறுகிறார்.