நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் என்றாலும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது கவனம் பெற்றுள்ளது
பிரதமர் மோடி இன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் உரையாடினார். இது ஒரு அரிய உரையாடலாக கருதப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அவை கூடுவதற்கு முன்பு, மோடி பல்வேறு தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய அமர்வை அடைந்த அவர், சோனியா காந்தியுடன் சிறிது நேரம் உரையாடினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் என்றாலும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது கவனம் பெற்றுள்ளது. அப்போது சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து பிரதமர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் செவ்வாய்க்கிழமை மாலை போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் மோடி, சோனியாவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு இந்தச் சுருக்கமான உரையாடல் நடைபெற்றது. அவை தொடங்கியவுடன், பிரதமர் சோனியா காந்தியிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார், அதற்கு சோனியா காந்தி, "நான் நலமாக இருக்கிறேன்" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்த சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்தார். அந்த கொடூரமான வீடியோவைக் கண்டு தனது இதயம் வேதனையால் நிரம்பியதாகக் கூறினார். மேலும் மணிப்பூரில் நடந்ததை மன்னிக்க முடியாது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்" என்று மோடி கூறினார்.
இதனிடையே அந்த வீடியோவில் காணப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை மணிப்பூர் காவல்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ நேற்று வெளியானதில் இருந்தே மணிப்பூரில் பதற்றம் அதிகரித்தது. மணிப்பூரில் மே 3 முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.