
டெல்லியில் செங்கோட்டை அருகே சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில், சம்பவம் நடந்து 2 நாள் கழித்து பிரதமர் மோடி இன்று மாலை தனது இல்லத்தில் உயர்மட்ட குழுக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமரின் இல்லத்திற்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பூட்டானுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து நேரடியாக மத்திய டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனைக்குச் சென்று, குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பத் துறை அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
பின்னர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மருத்துவமனைக்குச் சென்று டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்தக் கூட்டுச் சதிக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!" என்று உறுதி அளித்தார்.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாதச் சதி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்துள்ளது. என்.ஐ.ஏ., மூத்த கண்காணிப்பாளர் (SP) மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளின் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ஒரு குழு, 2008 மும்பை தாக்குதல்களைப் போலவே டெல்லி, குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் முழுவதும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
செங்கோட்டை, இந்தியா கேட், அரசியல் சாசன கிளப், கவுரி சங்கர் கோவில், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற முக்கியப் பொது இடங்களைத் தாக்குவதன் மூலம் மத மோதல்களைத் தூண்டும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதலுக்குத் தயாரானதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரித்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.