அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம்: மவுனம் கலைத்த பிரதமர் மோடி!

By Manikanda PrabuFirst Published Dec 20, 2023, 11:36 AM IST
Highlights

அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம் தீட்டியதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்

அமெரிக்க மண்ணில் அந்நாட்டு பிரஜை ஒருவரை  படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் இருந்தால் அது குறித்து பார்ப்பதாகவும், சில சம்பவங்கள் அமெரிக்க-இந்திய உறவுகளை சீர்குலைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பைனான்சியல் டைம்ஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “யாராவது எங்களுக்கு ஏதாவது தகவல் கொடுத்தால், நாங்கள் அதை நிச்சயமாக கவனிப்போம். எங்களுடைய குடிமகன் ஏதாவது நல்லது அல்லது கெட்டது செய்திருந்தால், அது என்னவென்று பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் ஆட்சிக்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.

நீதிக்கான சீக்கியர்கள் எனும் காலிஸ்தானி அமைப்பை வழிநடத்தும் குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவரிடம் கனடா நாட்டின் குடியுரிமையும் உள்ளது. கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் குர்பத்வந்த் சிங் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூனை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதியாக அறிவித்தது. ஆனால், தான் பயங்கரவாதி இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா மற்றும் சிலருடன் சேர்ந்து இந்திய அரசு ஊழியர் ஒருவர் பணியாற்றியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை சதி குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், தெற்காசியாவில் நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்ட சீக்கிய பிரிவினைவாதம் குறித்த தனது பாதுகாப்புக் கவலைகளை மேற்கத்திய நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பின்னணியில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வெளிநாடுகளில் உள்ள சில தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கூறுகள், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில், மிரட்டல்களில் ஈடுபட்டு வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சதித்திட்டத்தில் இந்தியா ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் சம்பவம் உலகிலேயே மிகவும் பின்விளைவு கொண்ட விஷயங்களில் ஒன்று என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இது அமெரிக்க-இந்தியா உறவை சிக்கலாக்கியுள்ளது. இருப்பினும், இந்த உறவை வலுப்படுத்துவதற்கு வலுவான இரு தரப்பு ஆதரவு உள்ளது. இது ஒரு முதிர்ந்த மற்றும் நிலையான கூட்டாண்மைக்கான தெளிவான விஷயம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரிப்பு; மத்திய அரசு எடுத்த முடிவுகளால் அதிரடி மாற்றம்!

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு எங்கள் கூட்டாண்மையின் முக்கிய அங்கமாக உள்ளது எனவும், இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளுடன் சில சம்பவங்களை இணைப்பது பொருத்தமானது என்று நான் நினைக்கவில்லை எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தாலும், தேசிய நலன் மூலம் வழிநடத்தப்பட்ட ஒரு நடைமுறை வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். மேற்கத்திய அழுத்தத்தை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடனும் பிரதமர் மோடி நல்லுறவை பேணி வருகிறார். ஆனால், எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

“உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. நாம் பலதரப்பு சகாப்தத்தில் வாழ்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

click me!