மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் முதலே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் வன்முறை வெடித்தது. அம்மாநிலத்தில் இன்று வரை அமைதி திரும்பவில்லை. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பாஜக அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுதியது.
இந்த விவாகரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து வருகிறார். ஆளும் பாஜகவை பொறுத்தவரை மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவையை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்காமல் குறுகிய கால விவாதத்துக்கே இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் தொடங்கியது தொல்லியல் ஆய்வு!
ஆனால், இரு அவைகளையும் ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்தி பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. இதனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளிலுமே அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட இரு அவைகளும், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று காலை மீண்டும் கூடியது. அப்போதும், மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் கையில் எடுத்தன. மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுமே நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு இன்று வரவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.