ஞானவாபி மசூதியில் தொடங்கியது தொல்லியல் ஆய்வு!

By Manikanda Prabu  |  First Published Jul 24, 2023, 10:06 AM IST

ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது


ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சீல் வைக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வு தொடங்கியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் 30 பேர் கொண்ட குழு இந்த  ஆய்வில் ஈடுபட்டுள்ளது. மசூதி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் நுழைந்த குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த வழக்கின் அனைத்து இந்து தரப்பு மனுதாரர்களின் வழக்கறிஞர்களும் உடன் இருக்கின்றனர். இதனை வழக்கறிஞர்களில் ஒருவரான மதன் மோகன் யாதவ் உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக, வாரணாசி போலீஸ் கமிஷனர் அசோக் முத்தா ஜெயின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரையும் சந்தித்து ஆய்வு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இருப்பினும், உச்ச நீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி, இந்த ஆய்வினை தள்ளி வைக்க வேண்டும் என முஸ்லிம் தரப்பின் வழக்கறிஞர்கர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, இந்த ஆய்வின்போது முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை என மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள மசூதி இருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, தேவையான இடங்களில் அகழ்வாராய்ச்சி உட்பட விரிவான அறிவியல் ஆய்வு நடத்துமாறு மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார். இந்திய தொல்லியல் துறை, அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆய்வானாது நடந்து வருகிறது.

Manipur violence : மணிப்பூர் வன்முறையில் பள்ளிக்கு தீவைப்பு.. தொடரும் பதற்றம் - திணறும் அரசு

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது. அதேசமயம், இது தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அந்த உத்தரவானது நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில்தான், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!