
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக சைப்ரஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜி-7 உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று தொடங்கி ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
இந்தப் பயணத்தின் பகுதியாக பிரதமர் மோடி சைப்ரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். முதலில் அவர் சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்றடைந்தார். அங்கு அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
மோடிக்கு சைப்ரஸின் உயரிய விருது
நிகோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. சைப்ரஸின் மிக உயரிய விருதான "கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III" (Grand Cross of the Order of Makarios III) விருதை சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெஸ், பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார்.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், “கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும், "இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் உள்ளன. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கெளரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.